Monday, December 22, 2008

RP ராஜநாயஹம் அவர்களுக்கு எதிர்வினை.



இந்தப்பதிவு தான் என்னைத்தூண்டியது.
http://rprajanayahem.blogspot.com/2008/12/joke-is-very-serious-thing.html

Sunday, November 9, 2008

சொந்தம்

கல்யாணம்னா சோத்துக்கு வருவான்
செத்தா சுண்டலுக்கு வருவான்.

இந்த தடாலடி தத்துவத்தில் உள்ள உண்மை என்னை பெரிதும் கவர்ந்துவிட்டது. காசு,பணமுன்னு வர்றப்ப கட்டுன பொண்டாட்டியே பத்ரகாளியா மாறுகிற சூழ்நிலையில சொந்தமாவது,சுருத்தாவது. நம்மால அஞ்சு பைசாவாவது பிரயோஜனம் இருந்தா தான் ஒருத்தன் நம்மளை மதிக்கிறான்.அப்படி பிரயோஜனம் இருக்கற வரைக்கும் தான் பொண்டாட்டி,புள்ளை கூட மதிக்கும். பிரயோஜனம் இல்லாத சூழ்நிலையிலும் மதிக்கக்கூடிய மனைவி,மக்களைப் பெற்றிருப்பவன் உலகின் மாபெரும் கோடீஸ்வரன். ஆனா நம்மை மாதிரி மிடில்கிளாஸ் ஆசாமிகள் அந்த பொண்டாட்டி,புள்ளைகளையாவது சந்தோசப்படுத்தி அவங்க கிட்ட இருந்து மதிப்பு,மரியாதைய வாங்குறதுக்கு தான் பலவித வித்தைகளையும் வாழ்க்கையில செய்யவேண்டியிருக்கு. குடும்பத்தை நல்லா வச்சுக்கிட்டு , அதைத்தாண்டி ஒரு நாலு பேருக்கு நல்லது செஞ்சா அந்த நாலு பேரு அவனைத் தங்கள் தலைவனாகவே ஏற்றுக்கொள்கிறார்கள். நாலு பேருக்கு தலைவருங்கறதால அஞ்சாவது ஆளும் மரியாதை கொடுக்க ஆரம்பிக்கிறான். எவனும் மதிச்சா என்ன மதிக்காட்டி என்ன?போங்கடா புல்டாக்குகளா அப்படின்னு நினைக்கிறவன் சித்தன் ரேஞ்சுக்கு போயிடுறான்.'என்னத்த வாழ்ந்து,என்னத்த சாதிச்சு' இப்படி பொலம்புற என்னத்த கண்னையாக்களும் இருக்காங்க.எல்லா பேருக்கும் பொழப்பு ஓடிக்கிட்டு தான் இருக்கு.

Friday, October 3, 2008

ஜீரோ டிகிரி

ஜீரோ டிகிரியை வாசித்தது ஒரு விபத்து தான். இலக்கின்றி நகருக்குள் சென்ற போது அரபுக்குதிரை ஒன்றின் அருமையான பின்பக்கங்களை ரசித்தவாறே பின் தொடர ஆரம்பித்து விட்டேன். கால்மணி நேர நடைக்குப்பின் குதிரை காணாமல் போன கணத்தில் நான் நின்று கொண்டிருந்தது பிரபல புத்தகக்கடையின் வாசலில். சிறிது நேரத்தை இங்கே போக்கலாம் என நினைத்து உள்ளே சென்றேன்.அரைமணி நேரம் அலசி முடிவாகத் தேர்ந்தெடுத்தது இரண்டு புத்தகங்கள்.ராகுல சாங்கிருத்தியாயனின் மனிதசமுதாயம்,சாருவின் ஜீரோ டிகிரியும். இரண்டில் ஒன்று தான் வாங்கவேண்டும். ராகுலா,சாருவா?.ராகுலை நம்பி வாங்கலாம்,சாருவின் மீது ஒரு மரியாதையும் இல்லை.ஆனாலும் இணையத்தை மேய்வதிலிருந்து அவரும் ஒரு இலக்கிய ஆளுமை என்று சந்தேகத்திற்கிடமின்றி தெரிகின்றது.பின்நவீனத்துவ பிச்சுவா பக்கிரிகளில் முதன்மையானவர் என்றும் உணர முடிகிறது,எனவே வாங்கிப்படிக்கலாம் என்று முடிவெடுத்து வாங்கிவிட்டேன்.உயிர்மை பதிப்பகத்தால் உயர்தரமாக அச்சிடப்பட்ட நூல்.புதுப்பொண்ணு போல் அச்சுக்குலையாமல் இருக்கும் புத்தகத்துக்கு வலிக்காமல் பக்கங்களைத் திருப்புகிறேன்,ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டிருந்தது ஜீரோ டிகிடி.முதல் பத்து பக்கங்களை தாண்டிவிட்ட போது காதிலே சூடாக உணர்ந்தேன்,தொட்டுப்பார்த்ததில் மூளை கலங்கி வழிந்து கொண்டிருந்தது தெரிந்தது.மூடிவிட்டு சிந்தித்தேன்.எப்படி இதை மேற்கொள்வது.இதைப்பற்றிய தகவல்கள் இணையத்தில் இல்லாமலா இருக்கும்.தேடியதில் கிடைத்தது கென்,சாருவின் இணையப்பக்கத்திலேயே ஒரு ஆங்கில விமர்சனம், மற்றும் ஒரு பெண். கென் மற்றும் சாருவின் பக்கம் சில தகவல்களை,விளக்கங்களை,நம்பிக்கையை அளித்தது.பெண் அவரை துவைத்து காயப்போட்டிருந்தார்,ராமலட்சுமியோ,சுப்புலட்சுமியோ..பெயர் தெரியவில்லை. Nonlinear வகையைச் சார்ந்தது இந்தக்கதை.இப்போது Non linear என்ற வார்த்தைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முற்பட்டேன்.இதற்கு முன்னமே அந்த வார்த்தையை கேள்விப்பட்டிருந்தாலும் அதைப்பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் இருந்ததில்லை.ஏனென்றால் அது மிகவும் தத்துவார்த்தமான,சிக்கலான,ஆழமான அர்த்தங்களைக்கொண்டிருக்கும்,அந்த அளவுக்கு நமக்கு பொறுமை பத்தாது என்று எண்ணிக்கொண்டு சும்மா இருந்து விடுவேன்.ஆனால் புரிந்துகொள்ள எளிமையாகத்தான் இருந்தது.Line என்றால் கோடு அதாவது நேர்க்கோடு.Nonline என்றால் நேர்க்கோடற்றது என்று அர்த்தம். மருது,ஆதிமூலம் போன்றவர்களின் ஓவியங்கள் கன்னா பின்னாவென்று கிறுக்கலாக வரையப்பட்டிருக்கும்.அதனால் அவர்களுக்கு தத்ரூபமான ஓவியங்கள் வரையத்தெரியாது என்று அர்த்தமல்ல.அவர்கள் அதையும் தாண்டி சென்றவர்கள்.ஓவியக்கலையிலே புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள்.சாருவின் எழுத்தும் அத்தகையது தான்.எழுத்துக்களை கலைத்துப்போட்டுள்ளார்.கலைத்துப்போடும் உத்தியில் மட்டும் பின்நவீனத்துவம் இருந்தால் அது ஏமாற்றுவித்தையாகி விடும்.எழுத்தில் மேட்டர் இருக்கா,சரக்கு இருக்கா,பொருள் இருக்கா,அர்த்தம் இருக்கா என்றால் இருக்கிறது, நிச்சயம் இருக்கிறது,நிறையவே இருக்கிறது.அவருடைய இணையப்பக்கத்தில் இருப்பது போல் எளிய நடையில் இல்லாமல்,தீவிரமான நடையில்,அருமையான சொற்களைக்கொண்டு உருவாக்கியுள்ளார்.கதையிலே காதல் இருக்கிறது,காமம் இருக்கிறது,சோகம் இருக்கிறது,துரோகம் இருக்கிறது,வறுமை,நம்பிக்கை,நகைச்சுவை இருக்கிறது,அறிவியல் இருக்கிறது,ஆன்மீகம் இருக்கிறது.சில இடங்களில் வெடிச்சிரிப்பு சிரிக்க முடிகிறது,சில இடங்களில் கண்ணீர் துளிர்க்கிறது.ஜீரோ டிகிரி என்பதற்குப்பதிலாக 360டிகிரி என்று வைத்திருக்கலாம்.ஆம் , கதை வாழ்க்கையின் சகல பக்கங்களையும் தொட்டுச்செல்கிறது.

ஆபாசமாக இருக்கிறது,அருவறுப்பு உணர்வு மேலோங்குகிறது என்று நினைத்துக்கொள்பவர்களுக்கு கதையிலேயே பதில் இருக்கிறது.

"மைக்கேல் ஏஞ்சலோவின் ஓவியத்தைப்பார்த்த ஒருவன் சொன்னானாம்...ஏன்யா இவ்வளவு வரையத்தெரிந்த அந்த ஆளுக்கு கோமணமோ,ஜட்டியோ வரையத்தெரியாம போச்சு. புடுக்கெல்லாம் தெரியுதே."

எல்லையற்ற துணிச்சலும்,எல்லையற்ற எழுத்துவன்மையும் கொண்ட ஒருவனால் இப்படித்தான் கதை எழுத முடியும்.

Friday, August 15, 2008

காந்தி திரைப்படம்




சுதந்திரதினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற காந்தி திரைப்படம் தூர்தர்ஷனில் தமிழில் ஒளிபரப்பப்பட்டது. ஆங்கிலத்தில் சிலமுறை பார்த்திருந்தாலும் தமிழில் பார்த்தது மிகவும் நன்றாக இருந்தது. நம் முன்னோர்களின் தியாகத்தையும்,சுதந்திரப்போராட்ட வரலாறையும் இதைவிட எளிமையாகவும்,அழகாகவும்,முக்கியமாக உண்மையாகவும் சொல்லிவிட முடியாது. காந்தி என்னும் மாமனிதனின் நாட்டைச்சேர்ந்தவன் என்று நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இறுதிக்காட்சிகளில் மிகமுக்கியமான ஒரு காட்சியை தூர்தர்ஷனில் இருட்டடிப்பு அல்லது கத்தரித்து விட்டார்கள். சுதந்திரம் வழங்க வெள்ளை அரசு முடிவு செய்தவுடன் காந்தி,ஜின்னா,படேல்,நேரு ஆகியோர் தனியறையில் ஆலோசனை செய்கின்றனர். தனிநாடு வேண்டுமென்று ஜின்னா உறுதியாக இருக்கிறார். காந்தி அவரை சமாதானம் செய்யும் விதமாக 'இந்தியாவின் முதல் பிரதமராக நீங்கள் இருங்கள்' என்கிறார், நீண்ட அமைதி நிலவுகிறது, நேருவின் குரல் அமைதியை உடைக்கிறது. "பாபு நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்,ஆனால் வெளியே நிற்கும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை" என்கிறார். அடுத்ததாக ஜின்னா "சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தானா அல்லது உள்நாட்டு யுத்தமா" என்று கேட்கிறார். ஜின்னாவின் முத்தாய்ப்பான இந்த வசனத்திற்குப்பிறகு அடுத்த காட்சியில் இருநாடுகளாக பிரிந்து தனித்தனி தேசியக்கொடி ஏற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த இரு காட்சிகளுக்கும் இடையிலே உள்ள காட்சி வெட்டப்பட்டுள்ளது. அதில் காந்தி இறுதி முயற்சியாக மற்ற மூவரையும் அறைக்கு வெளியே அழைத்து வந்து பேசுவார். படேல் தனிநாடு பிரிவினையை மூர்க்கமாக எதிர்ப்பார், உடனே ஜின்னா "நாங்கள் வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்று, மீண்டும் உங்களிடம் அடிமையாக இருக்க மாட்டோம்" என்று கூறுவார். உங்களிடம் என்று சொல்லும் இடத்தில் இந்துக்களிடம் அல்லது பிராமணர்களிடம் என்று குறிப்பாக சொல்லுவாரா அல்லது உங்களிடம் என்று பொதுவாக சொல்லுவாரா என்பது சரியாக நினைவில் இல்லை. படத்தின் பஞ்ச் வசனம் இதுதான். ஏன் இது தூர்தர்ஷனால் நீக்கப்பட்டது?. சினிமாவில் இடம்பெற்ற இந்த உரையாடல் இயக்குனரின் கற்பனையா? அல்லது உண்மையாகவே நடந்தது தானா? தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்களேன்.

Thursday, August 7, 2008

என் இனிய இசின்பயேவா

மனிதனின் உன்னதத்தை,அவனுடைய முயற்சிகளின் வலிமையை, அடையக்கூடிய உயரங்களுக்கான எல்லையை உலகுக்கு உரத்துச்சொல்லும் அழகுப்புயல் தான் இசின்பயேவா. சாதாரண குடும்பத்தில் பிறந்த இவருக்கு தான் செய்த சாதனைகளை தானே முறியடித்துக்கொண்டு இருப்பதே வேலை. இருபத்து நான்கு முறை உலகசாதனை செய்துள்ளாராம். இத்தனை தடவைகளுக்கும் மேலாக உலகசாதனை ஆப்பிரிக்கக்கண்டத்து ஆண் சிங்கம் ஒன்று செய்துள்ளது,பெயர் தெரியவில்லை. போல்வால்ட் விளையாட்டில் ஐந்து மீட்டருக்கும் மேல் தாண்டிய உலகின் ஒரே பெண்மணி.கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கிய இசின்பயேவா இம்முறையும் வாங்கவேண்டும்.

(ஒலிம்பிக்கில் செஸ்,கிரிக்கெட் போன்ற அறிவு சார்ந்த விளையாட்டுகளை சேர்க்காததற்கு ஒலிம்பிக் கமிட்டிக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.இந்த விளையாட்டுகளில் இந்தியா தான் தங்கம் வாங்கும் என்பதால் இவற்றை ஒலிம்பிக்கில் சேர்த்துக்கொள்ள உலகநாடுகள் சதி செய்கின்றன. இப்படி ஒரு கண்டுபிடிப்பை ஆ.வி அறிவுஜீவி மதன் செய்துள்ளார்)






Wednesday, August 6, 2008

பிரியாணிக்குஞ்சுகளை விஞ்சிய விசிலடிச்சான் குஞ்சுகள்

வலையுலக்குக்கே உரிய சொல்லாட்சி " பிரியாணிக்குஞ்சு" என்பது. இதை உருவாக்கிய மகராசன் யார் என தெரியவில்லை. தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு கண்மூடித்தனமான ஆதரவு கொடுப்பவர்கள் இந்த பி.குஞ்சுகள் . அரை பிளேட் பிரியாணிக்கும்,குவார்ட்டருக்கும் உயிரையும் கொடுக்கத்துணிபவர்கள் என்றால் மிகையாகாது.இவர்களுக்கு சற்றும் சளைக்காத இன்னொரு வகையினர் தான் விசிலடிச்சான் குஞ்சுகள். தங்கள் மனங்கவர்ந்த நடிகருக்காக மொட்டை போடுவது,காவடி தூக்குவது, அங்கப்பிரதட்சணம் செய்வது, கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, பேப்பரைக்கிழித்து சூறை விடுவது , மிக முக்கியமாக விசிலடிப்பது இவையே வி.குஞ்சுகளின் முக்கிய பணிகள். சமீபத்திய தசாவதார விமர்சன களேபரத்தில் வீறு கொண்டெழுந்த விசில் குஞ்சுகளின் ஆவேசம் ஆச்சரியமூட்டுவதாகவுள்ளது. பிரி.குஞ்சுகளின் ஆவேசத்தையாவது புரிந்து கொள்ளமுடியும். இனஉணர்வு,மொழியுணர்வு,கொளகை ரீதியான விசயங்கள் இவற்றுக்காக விடாப்பிடியாக அடித்துக்கொள்வார்கள்.இவர்கள் போராடுவதிலும் அர்த்தம் இருக்கிறது.தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து சொல்லாமல் இருந்தால் தங்கள் உரிமைகள் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் தசாவதாரம் படம் அறுவை என்று சிலர் சொன்ன சப்பை மேட்டருக்காக விசில் குஞ்சுகள் வந்த வரத்து அச்சமூட்டுவதாக உள்ளது. இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது. விசில் குஞ்சுகளில் பெரும்பாலானோர் அரசியல்,சமூக விசயங்களில் எந்த கருத்தையும் உதிர்த்தது போல் தெரியவில்லை. கமல் படங்கள் ஓரளவிற்கு அறிவுபூர்வமாகவும்,அழகுணர்ச்சியோடும் இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவ்வாறில்லாமல் கண்மூடித்தனமாக ஆதரிப்பதால் என்ன பலன்?. பிரி.குஞ்சுகளுக்காவது கொள்கை,லட்சியம் என்று இருக்கிறபடியால் தங்கள் தலைவர்களின் முரண்பாடுகளை சகித்துக்கொண்டு இருந்து விடுகின்றனர், விசில் குஞ்சுகளுக்கு அப்படி என்ன நிர்ப்பந்தம் இருக்கிறது?.

இந்த இருவகை குஞ்சுகளிலும் சேராத தனித்தன்மை வாய்ந்த சிலர் இருக்கிறார்கள்.சுத்த சுயம்புவாக சிந்திக்கக்கூடியவர்கள், உலகமகா கருத்துக்களை சொல்பவர்கள், ஓட்டுப்போடக்கூட வரமாட்டார்கள். நடுநிலைக்குஞ்சுகள் என்று இவர்களை சொல்லலாம். கமலுக்கே இவ்வளவு வெறிபிடித்த விசில்குஞ்சுகள் இருக்கும்போது, ரஜினியைபற்றி சொல்லவே வேண்டாம். இவர்கள் இருவரும் அரசியலுக்கு வந்தால் அரசியல் பெருந்தலைகள் பலவும் பின்னங்கால் பிடறியில் பட ஓடி ஒளிவது மட்டும் உறுதி.

Sunday, August 3, 2008

ரஜினியின் குரங்குத்தவம்

ஒகனேக்கல் பிரச்சினையில் கன்னடர்களை உதைக்க வேண்டும் என ரஜினி உணர்ச்சி வசப்பட்ட போது, தான் விரும்பியோ,விரும்பாமலோ,அறிந்தோ,அறியாமலோ தமிழக அரசியலில் வலுவாக தன் இருப்பை,முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினார் என்றே நினைத்தேன். கலைஞருக்குப் பின்னான அரசியலில் வேறு எவரையும் விட ரஜினிக்கு உள்ள வாய்ப்பு பிரகாசமானது. எதார்த்த நிலை இவ்வாறு இருக்க குசேலன் படத்துக்காக கன்னடர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளது அவரது இமேஜை குலைப்பதாகவே உள்ளது. வருத்தம் தெரிவித்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதாக உள்ளது என்று ஒரு சாரார் எண்ணினாலும், மறுபுறம் அவரது குழம்பிய மனதை,அரசியல் தெளிவின்மையைக் காட்டுவதாகவே உள்ளது.

ரஜினியின் பலம் ஆன்மீகம் என்று கே.பாலச்சந்தர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார்.ஆன்மீகச்சிந்தனைகளாலும்,தவ வலிமையாலும் நிறைந்து உள்ள ரஜினியின் இச்செயல்கள் ஆன்மீகம்,தியானம் போன்றவற்றை ஐயுற வைக்கின்றன. இச்செயல்கள் அவர் ஒரு நல்லநடிகர் என்பதை நிருபிப்பதுடன்,மேலும் அவர் ஒரு நல்ல தலைவராக முடியாது என்றும் நிரூபிக்கின்றன. ரஜினி் ஒரு அரசியல் ஆளுமை என்பதால் தான் கன்னடர்களின் வெறுப்பை சம்பாதித்து உள்ளார்.ஒரு நடிகராக பேசியிருந்தால் கன்னடர்கள் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள். எனவே தான் ஒரு நடிகரா, அல்லது அரசியல் ஆசை தனக்குள் இருக்கிறதா என்பதை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும். அதுவரை சுண்டெலிகளும் அவரைக் கடித்து வைத்துவிட்டு கொக்கரிப்பது தொடரத்தான் செய்யும்.

Monday, July 28, 2008

இளம் ஆசிரியையும்,நானும்

கல்லூரியின் அழகான இளம் ஆசிரியை,என்னை விட ஒன்றிரண்டு வயது மூத்தவராக இருக்கலாம். கண்ணியமாக சேலை கட்டி வந்தாலும் அவரின் அழகான கவர்ச்சியிலே பயல்கள் கதிகலங்கிப் போயிருந்தார்கள்.அவரை எட்ட நின்று பார்த்து ரசித்தாலும், அவருடைய பார்வையில் நான் சிக்குவேன் என்று நினைத்திருக்கவில்லை.தேர்வு ஒன்று நடந்த போது கண்காணிக்கும் பணிக்கு வந்துவிட்டார் அந்த அழகு டீச்சர்.ஏற்கெனவே நமது விடைத்தாள்களை திருத்தும் ஆசிரியருக்கு ரத்தக்கொதிப்பு வந்துவிடும்,அந்த லட்சணத்தில் தான் இருக்கும் எனது பதில்கள். இந்நிலையில் இவர் வேறா?.கிழிஞ்சது கிருஷ்ணகிரி என்று நினைத்துக்கொண்டேன்.நம்ம கனவு டீச்சரை அருகிலே பார்த்து ரசிக்க நல்ல வாய்ப்பு தான் என்று மனசு துள்ளிக்குதித்தாலும், தேர்வெழுத வேண்டிய கடமை வேறு என்னை டென்சனுக்குள்ளாக்கிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக என்னுடைய பணியை தொடங்கிவிட்டேன்.அவர் பார்க்காத நேரங்களில் அவரை ரசித்துக்கொண்டே எழுத்துப்பணியை செய்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் சென்றிருக்கும் என்னையே யாரோ பார்ப்பது போல் ஒரு உணர்வு.நிமிர்ந்து பார்த்தால் டீச்சரின் பார்வை என்னை துளைத்துக்கொண்டிருந்தது.குத்தீட்டியை வைத்து நெஞ்சிலே குத்தியது போன்று இருந்தது, ஒரு நிமிடம் இதயத்துடிப்பு நின்று விட்டது.காரணம் அந்தக்கண்களிலே ஒரு கனிவு தெரிந்தது. ஒரு அந்நியனைப் பார்க்கும் பார்வையல்ல அது.கடவுளே என்ன சோதனை இது? நான் ஒழுங்காக தேர்வெழுத வேண்டாமா?.சிறிது நேரம் சென்றிருக்கும், அந்தக்கண்களில் வேறு ஏதாவது செய்தி தெரிகிறதா? பார் பார் என்று உத்தரவிட்டது உள்மனம். நிமிர்ந்தேன், மீண்டும் அதே பார்வை, உடன் ஒரு புன்னகை. சத்தான புன்னகையிலே ஆராய்ச்சியாளன் செத்தான்.இரண்டு மணி நேரம் இரு நிமிடங்களாக ஓடி விட்டது.உடன் எழுதியவர்கள் எல்லாம் சென்று விட்டனர். நான் மட்டும் கடைசி ஆள். மும்முரமாக எழுதுவதாக எழுதிக்கொண்டிருந்தேன்.அருகில் வந்தார் அழகு டீச்சர். முகத்தில் மாறாத புன்னகையுடன் "கேள்வியையே திரும்பத்திரும்ப எழுதியது போதும், பேப்பரைக்கொடுங்கள்" என்றார். எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது, நம்மைப் பற்றி எப்படிப் புரிந்திருக்கிறார் என்று ஆச்சரியம் வேறு. நானும் ஒரு புன்னகையுடன் விடைத்தாளைக்கொடுத்துவிட்டு வெளியேறினேன்.கன்னியரின் கடைப்பார்வைக்கே உயிரைக்கொடுக்கும் மக்கள் நம் மக்கள். முழுப்பர்வையையும் பெற்ற நான் சும்மா இருந்து விட முடியுமா?. அவர் வந்து போகும் வழியிலெல்லாம் நிற்கலானேன். வரிசையாக இருக்கும் மரங்களோடு என்னையும் ஒரு மரம் என்று நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை, என்னைக் கண்டு கொள்ளவேயில்லை.மனசு வெறுத்துப் போய்விட்டது. ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று துயரப்பட்டாலும்,இரண்டு மணிநேரம் என் இதயத்தை இலவம்பஞ்சாக்கி மிதக்கவிட்டாரே அது ஒன்றே போதும் என்று தேற்றிக்கொண்டேன் மனதை.பத்துப் பதினைந்து வருடங்களாக அசை போட்டுக்கொண்டிருந்த இந்நிகழ்வுக்கு திடீரென்று இப்போது வேறு ஒரு காரணம் புலப்பட்டிருக்கிறது.

தேர்வின் போது நான் பிட் அடித்துக்கொண்டிருந்தேன்.இளம் ஆசிரியை ஆரம்பத்திலேயே அதைக் கவனித்திருக்க வேண்டும். கையும் களவுமாகப் பிடிப்பதற்குப் பதில் என் மேல் அவருக்கு கரிசனம் ஏற்பட்டிருக்க வேண்டும். என் பரிதவிப்பைப் பார்த்து ரசித்திருக்கிறார் , அதே நேரத்தில் திருட்டுத்தனம் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று என்னை ஸ்பெஷலாக கவனித்திருக்கிறார். சில நாட்களாகத் தான் இப்படியும் இருந்திருக்குமோ என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.அட எப்படி இருந்தால் தான் என்ன? அந்த இரண்டு மணி நேரத்தை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.

Wednesday, May 28, 2008

நாயும்,நண்பனும்

"அய்யா எந்த ஊரு ஜமீந்தாரு". நம்மள பார்த்து தான் இப்படி ஒரு கேள்வியக் கேட்டான் கருமம் பிடிச்ச ஒருத்தன். ஒன்னா ரூபாய்க்கு ரொட்டி வாங்கி ஒரு நாய்க்குப் போட்டுக்கிட்டு இருந்தேன்,அதுக்குத் தான் அப்படி ஒரு தாக்குதல் நம்ம மேல.இத்தனைக்கும் அவர் யாருன்னே எனக்குத் தெரியாது, நாய்க்கு ரொட்டி போட்டா இவன் ஏன்டா நாயா மாறுறான் அப்படின்னு யோசிச்சேன்.நம்மைக் கிண்டல் செய்வதின் மூலம் அவனுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சி கிடைக்கிறது.நமக்குத் தான் லேசுல கோபம் வராதுல்ல,அதனால லூசுல விட்டுட்டேன்.

பல வருசத்துக்கு முந்துன கதை இது.சமீபத்துல நம்ம நண்பன் ஒருத்தன் இதே மாதிரி பேசி நல்லா வாங்கிக் கட்டிக்கிட்டான்.நண்பய்ங்க எல்லாரும் அரைபோதையில ரோட்டோரமா நின்னு பேசிக்கிட்டு இருந்தோம்.அப்ப ஒரு நாய் எங்களை சுத்திச்சுத்தி வந்துச்சு, இதப் பார்த்த ஒரு நாய்க்காதலன் டக்குன்னு ஓடிப்போயி ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கி போட ஆரம்பிச்சுட்டாரு.ஒருத்தன் செய்யுற எந்த ஒரு விசயத்தையுமே அல்லது பேச்சையுமே எதிர்த்து பேசுனா தான் நமக்கு மரியாதை அப்படின்னு நினைக்கக்கூடிய ஆள் ஒருத்தன் நம்ம கிட்ட இருக்கான்.உடனே ஆரம்பிச்சான் "டே மாப்ள நிப்பாட்டுடா , நீ செல்வாக்கா இருக்கேன்னு ஒத்துக்குறோம்" அப்படின்னு சொன்னான். எனக்கோ கோபம் பயங்கரமா வந்துருச்சு.உடனே நான் சொன்னேன், "ஏ இங்க பாருய்யா, உன் பாக்கெட்டுலயும் பணம் இருக்கு ,அந்த நாய்க்கு வாங்கி போடணுமுன்னு தோனுச்சா.ஆனா வருசத்துல எத்தனை கோயிலுக்கு போற.பழனி முருகன்,திருப்பதி,ஐயப்பன்,பிள்ளையார்பட்டி இதுபோக கொல தெய்வம்,அப்புறம் லோக்கல் சாமி எல்லாத்தையும் கும்புடரதுக்கு எப்படியும் பத்தாயிரம் ரூபாய் காலி பண்ணிருவ.ஆனா நாய்க்கு பிஸ்கட் போட்டா உங்களுக்கு கேலியா இருக்கு,டீக்கடையில் எவனாவது பிஸ்கட் வாங்கி போடுவான்னு தானே அதுக எல்லாம் நாயா காத்துக்கிடக்கு. எச்சிக்கையால கூட காக்கா வெரட்டாம கடவுளைக் கும்பிட்டா மட்டும் புண்ணியத்தை அள்ளிக் கொடுத்துருவாரா,கடவுள் என்ன அவ்வளவு முட்டாளா?" அப்புடின்னு ஒரேயடியா போட்டுத் தாக்கிட்டேன், பய பீதியாயிட்டான்.

இப்படி வில்லங்கமாவே பேசுற ஆட்களை வாழ்க்கை முழுக்க சந்திச்சுக்கிட்டே தான் இருக்குறோம், இவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக செய்யும் முயற்சி கடைசியில் நம்மை சமூகத்திடமிருந்து விலக்கி விடுகிறது .இந்த வில்லங்க ஆட்களை போடா சாட்டான் என்று ஃபூ என்று ஊதி விட்டுச் செல்லும் வல்லமை படைத்தவர் யாராவது இருந்தால் அந்த முறைகளை அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, March 9, 2008

பின்னூட்டம் வேண்டாமே , ப்ளீஸ்

ஜெகத் உருவாக்கிய இப்பதிவுகள் இனியன், மற்றும் மலையருவி சிறப்பாக உள்ளன.மலையாளம்,தெலுங்கு,இந்தி போன்ற மொழிகளை தமிழ் எழுத்துகளாக நொடியில் மாற்றுகின்றது.செயற்பாட்டுக்கு வந்து எவ்வளவோ நாளாகியும் கவனிக்காமல் விட்ட என் போன்றோருக்கு தெரியப்படுத்தவே இப்பதிவு.
நமக்கு மிகவும் நெருங்கிய மலையாள எழுத்துக்களை மொழிமாற்றியில் இட்டு படித்துப்பார்த்தேன்.மிகவும் நன்றாக இருக்கிறது.அங்கே தான் பின்மொழி என்ற சொல்லாடலைப் பார்த்தேன்.பின்னூட்டம் தான் அங்கே பின்மொழியாக உள்ளது.பின்னூட்டம் அழகாக இருந்தாலும் பின்மொழி இன்னும் பொருத்தமாக தோன்றுகிறது.உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பின்மொழியில் சொல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Tuesday, February 26, 2008

கட்டபொம்மனும்,பருத்தி வீரர்களும்

ஆங்கிலப் படங்களை காப்பி செய்து தமிழ் படங்கள் எடுப்பதைத் தான் இதுவரை நாம் பார்த்திருக்கிறோம்.தமிழ்ப் படம் ஒன்றை காப்பி செய்து வந்த ஆங்கிலப்படம் ஒன்றை பார்த்தேன் .அதுதான் 300 பருத்திவீரர்கள்.நம்முடைய வீரபாண்டிய கட்டபொம்மனை அப்படியே எடுத்திருக்கிறார்கள்.கதை மட்டுமல்ல , கதாநாயகனின் நடிப்பு கூட சிவாஜியை முழுவதுமாக உள்வாங்கி செய்திருப்பது போல் தெரிகிறது.

கட்டபொம்மனில் இருப்பதுபோலவே இதிலும் ஒரு எட்டப்பன் வருகிறார்,அதைப்போலவே இதிலும் தூது சொல்லி ஒருவர் வருகிறார்,அதைப்போலவே இதிலும் கதாநாயகன் இறுதியில் கொல்லப்படுகிறார்.

உள்ளத்தை கொள்ளைகொள்ளும் பலப்பல காட்சிகள் உள்ளத.தூதுவர் வரும் காட்சி மிரள வைக்கிறது.மண்டையோடு சகிதமாக கருங்கல் சிலையென வரும் தூதுவர் கதாநாயகனிடம் செய்தியை சொல்லாமல் மிரட்டும் தொனியில் பேசுவதும், அதற்கு கைமேல் பலனாக உயிரை விடுவதும் நன்றாக உள்ளது.

'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று அந்த கட்டழகு நாயகன் பேசும்போது நமக்கு புல்லரித்து தான் போய்விடுகிறது.சண்டை மற்றும் ஃபேண்டஸி கலந்து கட்டி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சண்டை ரசிகர்களுக்கும்,குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.

Saturday, February 16, 2008

டவுசர் பாண்டியின் அட்டகாசங்கள்

ஜெமோவின் இணையப்பக்கங்களை மேய்ந்ததில் அவர் அனைத்து விஷயங்களையுமே கேலி செய்கிறார்.வரைமுறை இல்லாமல் கேலி செய்பவர்கள் அடிப்படையில் தன்மதிப்பு இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.அவர் கேலியிலிருந்து தப்பிய விஷயம் எதுவென்று பார்த்தால் இந்து மதம் மட்டுமே மிஞ்சுகிறது.

பெரியாரின் இயக்கம் மலட்டு இயக்கம் என்று சொல்வதைப் பார்த்தால் இவர் ஒரு மூனாபூனாவாக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று அவரை வாசித்துப் பார்த்த நண்பர் ஒருவர் கூறுகிறார்.அறிவியல் புனைகதை எழுதுகிறேன் பேர்வழி என்று சித்தர்களின் கோவணத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால் இந்த ஆள் பழைய பெருங்காய டப்பா என்று இன்னொரு நண்பன் அலுத்துக் கொள்கிறான்.இவர் பேண்டது,மோண்டது,வந்தது,போனது எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்,ஏனென்றால் அதுதான் இலக்கியம்.கட்சியிலே இருந்து கொண்டே காலை வாருகிறானே என்ன ஜென்மம்யா இவன் என்று தோழர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.அழியும் நிலையில் இந்து மதம் இருப்பதாகவும்,அதைக் காப்பாற்ற வந்த தெய்வப்பிறவியாகவும் இவருடைய எழுத்துக்கள் இருப்பதாக இந்து தேசிய பற்றாளர் ஒருவர் கூறுகிறார்.தனிப்பட்ட முறையில் அவரை கவனிக்கும் போது இந்தியாவின் பெருமையை இந்துமத எழுச்சியின் மூலம் மீட்டெடுக்க வந்த மாவீரனாகவே காட்சியளிக்கிறார்.எவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் நவீன இலக்கியத்தில் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை உணரமுடிகிறது.அவர் ஒரு டவுசர்பாண்டி* என்ற அளவிலே அவரை வாசிப்பது தவிர்க்க முடியாதது.
(டவுசர் பாண்டி-வழி கேட்டு வருபவனை சுத்தி விடுவது)
ஜெமோ பற்றிய இன்னொரு இடுகை.
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_15.html

Thursday, February 14, 2008

அழகு என்பது ஆண்பாலா,பெண்பாலா?

மின்னலைப் பிடித்து
மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்

இப்படியும் ஒரு
பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூச்சை விட்டான்

அழகு என்பது ஆண்பாலா;பெண்பாலா
என்பதில் சந்தேகம் இன்றுடன் தீர்ந்தது
அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா.

கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும்
இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா.

(இதை எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை.அவரை வியந்து போற்றுகின்றேன்)

Saturday, January 26, 2008

NPD

தற்பெருமை கொள்ளாத எந்த ஒரு மனிதனும் இங்கு இல்லை.அளவு தான் மாறுபடுகிறது.அளவைத் தாண்டும் போது அது அருவருக்கத் தக்கதாகி விடுகிறது.நண்பன் ஒருவனுடனான அனுபவங்கள் தான் இந்தப்பதிவு.

ஒரு நாள் பார் ஒன்றில் தண்ணியைப் போட்டுக்கொண்டிருந்தோம்.எதிரில் வேறொருவர் தனியாக அமர்ந்து போதையேற்றிக் கொண்டிருந்தார்,அவரிடம் பேச்சை ஆரம்பித்தான் நண்பன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டான். தான் ஒரு மருந்துக்கடை நகருக்குள் வைத்திருப்பதாக அவர் சொன்னார்.

நண்பனைப் பற்றி சில வார்த்தைகள்.M.Sc,M.Ed பார்டர் மார்க்கில் பாஸாகி முப்பத்தைந்து வயது வரை வேலை தேடிக்கொண்டிருப்பவன் தான் என் நண்பன்.அவனை ஒரு ஆசிரியராக உருவாக்கிவிட வேண்டுமென்று பல பத்தாண்டுகளாக திட்டம் போட்டு அவனை உருவாக்கியிருந்தனர் அவன் பெற்றோர்.அதனால் அவனுக்கு வாத்தியார் வேலை,அதுவும் கவர்மெண்ட் வேலையைத் தவிர உலகத்தில் வேறெதுவும் உயர்வானதில்லை என்ற எண்ணத்தில் உறுதியாய் இருப்பவன்.மருந்துக்கடை வைத்திருப்பவரை ஆழ்ந்து நோக்கினான்.இவ்வளவு தானா என்பதை பார்வையிலேயே உணர்த்திவிட்டு அவரிடம் இவ்வாறு கேட்கலானான்.இப்போது உங்களுக்கும்,எனக்கும் பொண்ணு கேட்டு போறோம் யாருக்கு தருவாங்க,சொல்லுங்க என்றான்.எதிர் பார்ட்டி திடுக்கிட்டார்.பின் சுதாரித்துக்கொண்டு எனக்கு திருமணமாகி,குழந்தைகள்,சொந்த வீடு,கார் என்று நல்ல வசதியோடு தான் வாழ்கிறேன்.ஒரு அரசாங்க ஊழியரை விட தான் எல்லாவகையிலும் நன்றாகவே வாழ்கிறேன்,மேலும் தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டிருப்பதற்காக தேசிய அளவில் ஒரு விருதும் வாங்கியுள்ளேன் என்றும் கூறினார்.அடுத்து நண்பன் ஆரம்பித்தான் .விருது என்னங்க விருது செருப்பு தைக்கிறவன் கூடத்தான் நல்லா தைச்சா விருது வாங்க முடியும்.உங்க கிட்ட இருந்து நான் தெரிஞ்சுக்கிறதுக்கு ஒன்னுமே இல்ல என்று சொன்னான்.எதிராளிக்கு முகம் செத்து விட்டது.எழுந்து சென்று விட்டார்.

எனக்கோ இவனுடன் சேர்ந்து ஏன் தான் வந்தோம் என்று ஆகிவிட்டது.வேலை கூட இல்லாத சூழலில் சமூகத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் எப்படி இவ்வாறு பேசமுடிகிறது என்று நான் அதிர்ச்சியாகி விட்டேன்.

அடுத்து ஒரு சம்பவம்.தனியார் பள்ளி ஒன்றில் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளச்சொல்லி பணம் கொடுத்து ஏமாந்த கதை.கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாயை பள்ளி முதலாளியிடம் கொடுத்து விட்டு பள்ளியில் இலவச சேவை செய்து வந்தான்.ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க ஆரம்பித்தான்.அவனைப் போல் நூறு பேருக்கு இல்லை என்று பதில் சொல்வதையே தன் வேலையாய் வைத்திருக்கிறார் பள்ளி முதலாளி.நண்பனும் நடையாய் நடந்து களைத்துப் போய்விட்டான்.அப்போதும் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் சொன்ன வாசகம் இதுதான்."இந்தப் பையன் கொடுத்த பணத்தை வாங்காமல் விடமாட்டான் போல இருக்கே" என்று அந்தப் பள்ளி முதலாளியை நினைக்க வைத்து விட்டேன் என்று சொன்னான்.கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கோ திகைப்பு,காசு கொடுத்து ஏமாந்ததும் இல்லாமல் எப்படி இவ்வளவு கெத்தாக பேசமுடிகிறது இவனால் என்று. இன்று வரை காசு வாங்க முடியவில்லை.

இப்படி இருக்கும் பொழுது நண்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்."முப்பது பவுன் நகை போடுறாங்களாம்,பிச்சைக்காரப்பசங்க" மாமனார் வீட்டைப் பற்றிய நண்பனின் கமெண்ட்.வேலை,வெட்டி இல்லாத உனக்கு பெண் கொடுப்பதே பெரிது என்று மற்ற நண்பர்கள் அவனுக்கு விளக்க வேண்டி இருந்தது.

இப்படியாக பல நேரங்களில் எங்களை மண்டை காய வைத்திருக்கிறான் நண்பன்.இதை சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்று நினைத்துக் கொண்டேன்.உண்மையிலேயே பெரும் பனமோ,புகழோ,தகுதியோ,திறமையோ உள்ளவர்களுக்கு வருவது தான் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்.நண்பனிடம் குறிப்பிட்டுச் சொல்லும் படியான எந்த விசயமும் இல்லை.பின் ஏன் இப்படி அளவுக்கதிகமாக அலட்டிக்கொள்கிறான் என்று நினைப்பேன்.அப்போது தான் NPD (Narcissistic Personality Disorder) என்பதைப் பற்றி அறிய நேர்ந்தது.தன்னைப் பற்றி தகுதிக்கு மீறி,தன்னையே வியந்து போற்றிக்கொள்ளும் ஒரு இயல்பு இந்த NPD உள்ளவர்களுக்கு இருக்கிறது.

நண்பனின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர இப்போது தான் முடிந்தது.NPD போன்று MPD(Multiple personality disorder ) என்று ஒரு பாதிப்பு மனிதர்களிடம் இருக்கிறது.இப்படி ஆட்களில் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை.ஆனால் வலைப்பதிவர்களில் MPD பாதிப்பு பெருமளவில் இருப்பதை உணர முடிகிறது.

பின் தொடரும் சிலுக்கின் குரல்

இது நடந்து அஞ்சாறு வருஷமாச்சு.மனைவியும் நானும் தேனிலவுக்காக ஊட்டி போயிருந்தோம்.சுற்றிப் பார்க்க ஒரு வண்டியை ஏற்பாடு செய்திருந்தனர் விடுதி நிர்வாகத்தினர்.அதில் புதுமண தம்பதியராக ஒரு பத்து சோடி மக்களை ஏற்றிக்கொண்டு வண்டி கிளம்பியது.பக்கத்தில்
ஒரு சோடி நல்ல கலராக , பார்க்க வடநாட்டு மக்களாக தெரிந்தார்கள்.ஆங்கிலத்திலேயே
பேசி நம்மைக் கொன்று எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அருங்காட்சியகம் ஒன்றைப் பார்ப்பதற்காக வண்டி நின்றது .அனைவரும் உள்ளே சென்று பார்த்துக்கொண்டிருந்தோம்.கைகளை பாண்ட் பாக்கெட்டினுள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய முழங்கையின் மேல் திடீரென ஒரு ரோஜாப்பூவை வைத்து அடித்தது போல் ஒரு சின்ன இடி.திரும்பிப் பார்த்தால் வண்டியில் அருகில் அமர்ந்துவந்த அழகுப்பெண்.நான் பார்க்கவும் அவர் அப்ப்ப்பா என்று வலியிலும்,வெட்கத்திலும் மெல்லிய குரலில் கத்தும் ஓசை காதில் விழவும் சரியாக இருந்தது.அவருடைய மார்பு தான் இடித்து விட்டது.என் வாழ்வில் அப்படியொரு இனிமையான,கிளுகிளுப்பான குரலை நான் கேட்டதில்லை.
ஆயிரம் சிலுக்குகள் ஒன்றாய்ச் சேர்ந்து காதில் கிசுகிசுப்பது போன்று இருந்தது அது.

சில நிமிடங்களில் எனக்கு சுய உணர்வு திரும்பியது.ஆஹா நம்ம ஊரு பொண்ணு தானா இது என்று நினைத்துக் கொண்டேன்.ஆபத்துக் காலங்களில் நம்மையும் அறியாமல் பேசுவது நம் தாய்மொழி தான்.

இந்தசம்பவம் என் நினைவடுக்குகளின் ஆழத்தில் இருந்தது.சமீபத்தில் தமிழ்நதியின் ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.தூங்கும் போது ஒருவனுடைய பின்புறத்தில் அடித்தால் எந்த மொழியில் கத்துவான் என்று கேட்டிருந்தார்.ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொண்டிருப்பவர்களை நன்றாகக் கேலி செய்திருந்தது அப்பின்னூட்டம்.அதைப் படித்தவுடன் மனதின் ஆழத்திலிருந்து விடுபட்டு மிதந்து மேலே வந்து விட்டது.

(தலைப்பு உபயம்-ஜெயமோகன்.அவருக்கு நன்றி.)

Friday, January 11, 2008

கலாமின் புத்தாண்டுச் செய்தி

புத்தாண்டு முடிந்து இத்தனை நாள் கழித்து இந்தப்பதிவா என்று நினைத்தாலும் சரித்திர நாயகனின் சிந்தனைகளை மறந்து விடக்கூடாது என்பது முக்கியம்.சன் தொலைக்காட்சியில் கலாம் பேட்டி வழங்கியதில் இருந்து சில வரிகள்.தனக்குப் பிடித்ததாக இரண்டு குறள்களை குறிப்பிட்டார்.
ஒன்று,
'வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு'
மற்றொன்று
'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து'

இரண்டுமே மனம் சம்பந்தப் பட்டது.உயர்ந்த எண்ணங்களை மனதில் விதைத்தால் உயர்ந்த பலன்களைஅறுவடை செய்யலாம்.விதைத்து விட்டால்
தானாகவே பலன் கிடைத்து விடுமா?அதற்கும் வழி சொல்கிறார் கலாம்.

எண்ணங்களில் உறுதி,கடும் உழைப்பு,செயலில் தீவிரம் இம்மூன்றும் இருந்து விட்டால் எத்தகைய சாதனையையும் செய்யலாம்.என்னைப் போன்ற வசதி,வாய்ப்புகளற்ற ஆனால் கனவு மட்டுமே காணத் தெரிந்தவர்களுக்கு கலாம் ஒரு ஆற்றல்மூலமாகத் திகழ்கிறார்.
என்னுடைய கனவை சுருக்கமாகச் சொன்னால் மாபெரும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்த வேண்டும்,அதில் பயில்பவர்களுக்கு ஆடம்ஸ்மித்,மார்க்ஸ்,நியூட்டன்,டார்வின்,ஐன்ஸ்டீன் போன்ற உலகை மாற்றிய சிந்தனையாளர்களை பயிற்றுவிக்க வேண்டும்.காலம் கருணை காட்டினால் ,அதாவது என்னை உயிரோடு விட்டு வைத்தால் இதையெல்லாம் செய்தே தீர வேண்டும்.

Thursday, January 10, 2008

நாய்க்கு மரியாதை

நிமிடத்துக்கு ஐம்பது வண்டி செல்லும் அந்த நெடுஞ்சாலையில் தினமும் ஒரு நாய் அடிபட்டு சாவது வாடிக்கை.வயிறு கிழிந்து கோரமாக செத்துக்கிடக்கும் நாயை அப்புறப்படுத்த யாருமே முன்வரமாட்டார்கள்,நானும் தான்.இதைச் செய்ய வேண்டிய நகர சுத்திகரிப்பு ஊழியர்களோ ஒரு நாள் கூட இதைச் செய்து பார்த்தில்லை.பல்லாயிரக்கணக்கான வாகனங்களால் ஏற்றப்பட்டு சில நாட்களில் அந்த நாய் இறந்த சுவடே தெரியாமல் போய்விடும்,தோல் கூட மிஞ்சாது.

வழக்கம் போல இப்படி ஒரு நாய் அடிபட்டு கிடந்த போது,தூரத்திலேயே அதைப் பார்த்து உச்சு கொட்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்.அப்போது ஒரு இளைஞன் நாயின் காலைப் பிடித்து சாலையின் ஓரத்துக்கு இழுத்துக் கொண்டிருந்தான்.அழுக்கு வேட்டி,சட்டை,பரட்டைத்தலை
சகிதமாக இருந்த அவனைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது.ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.

அவன் ஒரு நாடோடி.ஒரு துணி மூட்டையும்,சுமந்து செல்ல ஒரு குச்சியும் பக்கத்தில் இருந்தது.சிறு இரும்புக்கம்பி ஒன்றை வைத்து சின்ன குழி ஒன்றை வெட்ட ஆரம்பித்தான்.பின் அந்த நாயை குழியில் இறக்கி மண்னைப்போட்டு மூடினான்.இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருந்த நான் வெட்கிப்போய் விட்டேன்.

மாபெரும் ஆன்மீகத் தத்துவங்களை அறிந்திராத நாடோடியின் மனிதநேயம் மெய்சிலிர்க்க வைத்தது.

Monday, January 7, 2008

பத்தே நிமிடங்களில் தூங்குவது எப்படி?

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்"
நமக்கு ரொம்ப பிடிச்ச குறள்.இது மாதிரி ஒரு பத்து குறள் அப்புறம் ஆத்திசூடி ,இது மட்டும் போதும் .ஒரு மனுசன் நல்ல வாழ்க்கைய நடத்துவதற்கு.ஆனா நல்லவனா இருக்குறதுக்கும் இளிச்சவாயனா ஆகுறதுக்கும் நூலிழை தான் வித்தியாசம்.
என் நண்பன் ஒருத்தன் அடிக்கடி சொல்லுவான்
‘கோமாளியா கூட இருக்கலாம்,ஆனா ஏமாளியா இருக்காத'
அப்படின்னு.ஆனா 'ஏமாளியா கூட இரு,ஏமாத்துறவனா இருக்காத' அப்படிங்கறது தான் நம்ம பாலிஸி.இதனால என்ன நன்மைன்னு கேட்குறீங்களா,நைட்டு படுத்தா பத்து நிமிசத்துல தூக்கம் வரும்.அது தான் நன்மை.

இருமை கடந்தவன்

நல்லது,கெட்டது;வெளிச்சம்,இருட்டு;ஆண்,பெண்;
உயர்ந்தது,தாழ்ந்தது போன்ற இருவேறு நிலைகளையும் சமமாக பாவிக்க ஒருவனுக்கு தெரிந்துவிட்டால் அவனை இருமைகளைக் கடந்தவன் என்று கூறலாம்.கிருஷ்ணனைப் பற்றிய வர்ணனையாக கீதையிலே இது வருகிறது.

Sunday, January 6, 2008

வணக்கம்

”ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது ஐயா
அது பொம்பள மனசு தான்யா”

அப்படின்னு நம்மாளுக பாடுறாங்க.

"The greatest question that has never been answered is 'what does a woman want?' "

அப்படின்னு ப்ராய்டு சொல்லுறாரு.ரொம்ப நாளா இதப்பத்தி யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.பொம்பள மனசு மட்டுமில்ல ஆம்பள மனசும் அப்படித்தான் ஆழம் காண முடியாதது.மனுசப்பய மனசுக்குள்ள என்ன நினைக்கிறான்னு சம்பந்தப்பட்ட ஆளுக்கே தெரியாது.மனசு ரொம்ப சிக்கலானது.

டைரி எழுதணும்னு ரொம்ப நாளா ஆசை,இது வரைக்கும் செஞ்சதில்லை.மனசுல தோன்றதயெல்லாம் எழுதி வப்போம்.