Sunday, March 9, 2008
பின்னூட்டம் வேண்டாமே , ப்ளீஸ்
நமக்கு மிகவும் நெருங்கிய மலையாள எழுத்துக்களை மொழிமாற்றியில் இட்டு படித்துப்பார்த்தேன்.மிகவும் நன்றாக இருக்கிறது.அங்கே தான் பின்மொழி என்ற சொல்லாடலைப் பார்த்தேன்.பின்னூட்டம் தான் அங்கே பின்மொழியாக உள்ளது.பின்னூட்டம் அழகாக இருந்தாலும் பின்மொழி இன்னும் பொருத்தமாக தோன்றுகிறது.உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதை பின்மொழியில் சொல்ல அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
Tuesday, February 26, 2008
கட்டபொம்மனும்,பருத்தி வீரர்களும்
கட்டபொம்மனில் இருப்பதுபோலவே இதிலும் ஒரு எட்டப்பன் வருகிறார்,அதைப்போலவே இதிலும் தூது சொல்லி ஒருவர் வருகிறார்,அதைப்போலவே இதிலும் கதாநாயகன் இறுதியில் கொல்லப்படுகிறார்.
உள்ளத்தை கொள்ளைகொள்ளும் பலப்பல காட்சிகள் உள்ளத.தூதுவர் வரும் காட்சி மிரள வைக்கிறது.மண்டையோடு சகிதமாக கருங்கல் சிலையென வரும் தூதுவர் கதாநாயகனிடம் செய்தியை சொல்லாமல் மிரட்டும் தொனியில் பேசுவதும், அதற்கு கைமேல் பலனாக உயிரை விடுவதும் நன்றாக உள்ளது.
'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்று அந்த கட்டழகு நாயகன் பேசும்போது நமக்கு புல்லரித்து தான் போய்விடுகிறது.சண்டை மற்றும் ஃபேண்டஸி கலந்து கட்டி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சண்டை ரசிகர்களுக்கும்,குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
Saturday, February 16, 2008
டவுசர் பாண்டியின் அட்டகாசங்கள்
பெரியாரின் இயக்கம் மலட்டு இயக்கம் என்று சொல்வதைப் பார்த்தால் இவர் ஒரு மூனாபூனாவாக இருப்பாரோ என்று எண்ணத் தோன்றுகிறது என்று அவரை வாசித்துப் பார்த்த நண்பர் ஒருவர் கூறுகிறார்.அறிவியல் புனைகதை எழுதுகிறேன் பேர்வழி என்று சித்தர்களின் கோவணத்தை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தால் இந்த ஆள் பழைய பெருங்காய டப்பா என்று இன்னொரு நண்பன் அலுத்துக் கொள்கிறான்.இவர் பேண்டது,மோண்டது,வந்தது,போனது எல்லாவற்றையும் பதிவு செய்கிறார்,ஏனென்றால் அதுதான் இலக்கியம்.கட்சியிலே இருந்து கொண்டே காலை வாருகிறானே என்ன ஜென்மம்யா இவன் என்று தோழர் ஒருவர் குறைபட்டுக் கொண்டார்.அழியும் நிலையில் இந்து மதம் இருப்பதாகவும்,அதைக் காப்பாற்ற வந்த தெய்வப்பிறவியாகவும் இவருடைய எழுத்துக்கள் இருப்பதாக இந்து தேசிய பற்றாளர் ஒருவர் கூறுகிறார்.தனிப்பட்ட முறையில் அவரை கவனிக்கும் போது இந்தியாவின் பெருமையை இந்துமத எழுச்சியின் மூலம் மீட்டெடுக்க வந்த மாவீரனாகவே காட்சியளிக்கிறார்.எவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் இருந்தாலும் நவீன இலக்கியத்தில் அவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது என்பதை உணரமுடிகிறது.அவர் ஒரு டவுசர்பாண்டி* என்ற அளவிலே அவரை வாசிப்பது தவிர்க்க முடியாதது.
(டவுசர் பாண்டி-வழி கேட்டு வருபவனை சுத்தி விடுவது)
ஜெமோ பற்றிய இன்னொரு இடுகை.
http://kadalaiyur.blogspot.com/2008/02/blog-post_15.html
Thursday, February 14, 2008
அழகு என்பது ஆண்பாலா,பெண்பாலா?
மின்னலைப் பிடித்து
மேகத்தில் துடைத்து
பெண்ணென்று படைத்து
வீதியில் விட்டு விட்டான்
இப்படியும் ஒரு
பெண்மையைப் படைக்க
தன்னிடம் கற்பனை
தீர்ந்ததை எண்ணித்தான்
பிரம்மனும் மூச்சை விட்டான்
அழகு என்பது ஆண்பாலா;பெண்பாலா
என்பதில் சந்தேகம் இன்றுடன் தீர்ந்தது
அழகு என்பது
நிச்சயம் பெண்பாலடா.
கவிதை என்பது மொழியின் வடிவம்
என்றொரு கருத்தும்
இன்று உடைந்தது
கவிதை என்பது கன்னி வடிவமடா.
(இதை எழுதிய கவிஞர் யாரென்று தெரியவில்லை.அவரை வியந்து போற்றுகின்றேன்)
Saturday, January 26, 2008
NPD
ஒரு நாள் பார் ஒன்றில் தண்ணியைப் போட்டுக்கொண்டிருந்தோம்.எதிரில் வேறொருவர் தனியாக அமர்ந்து போதையேற்றிக் கொண்டிருந்தார்,அவரிடம் பேச்சை ஆரம்பித்தான் நண்பன்.நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று அவரிடம் கேட்டான். தான் ஒரு மருந்துக்கடை நகருக்குள் வைத்திருப்பதாக அவர் சொன்னார்.
நண்பனைப் பற்றி சில வார்த்தைகள்.M.Sc,M.Ed பார்டர் மார்க்கில் பாஸாகி முப்பத்தைந்து வயது வரை வேலை தேடிக்கொண்டிருப்பவன் தான் என் நண்பன்.அவனை ஒரு ஆசிரியராக உருவாக்கிவிட வேண்டுமென்று பல பத்தாண்டுகளாக திட்டம் போட்டு அவனை உருவாக்கியிருந்தனர் அவன் பெற்றோர்.அதனால் அவனுக்கு வாத்தியார் வேலை,அதுவும் கவர்மெண்ட் வேலையைத் தவிர உலகத்தில் வேறெதுவும் உயர்வானதில்லை என்ற எண்ணத்தில் உறுதியாய் இருப்பவன்.மருந்துக்கடை வைத்திருப்பவரை ஆழ்ந்து நோக்கினான்.இவ்வளவு தானா என்பதை பார்வையிலேயே உணர்த்திவிட்டு அவரிடம் இவ்வாறு கேட்கலானான்.இப்போது உங்களுக்கும்,எனக்கும் பொண்ணு கேட்டு போறோம் யாருக்கு தருவாங்க,சொல்லுங்க என்றான்.எதிர் பார்ட்டி திடுக்கிட்டார்.பின் சுதாரித்துக்கொண்டு எனக்கு திருமணமாகி,குழந்தைகள்,சொந்த வீடு,கார் என்று நல்ல வசதியோடு தான் வாழ்கிறேன்.ஒரு அரசாங்க ஊழியரை விட தான் எல்லாவகையிலும் நன்றாகவே வாழ்கிறேன்,மேலும் தொழிலை சிறப்பாக நடத்திக்கொண்டிருப்பதற்காக தேசிய அளவில் ஒரு விருதும் வாங்கியுள்ளேன் என்றும் கூறினார்.அடுத்து நண்பன் ஆரம்பித்தான் .விருது என்னங்க விருது செருப்பு தைக்கிறவன் கூடத்தான் நல்லா தைச்சா விருது வாங்க முடியும்.உங்க கிட்ட இருந்து நான் தெரிஞ்சுக்கிறதுக்கு ஒன்னுமே இல்ல என்று சொன்னான்.எதிராளிக்கு முகம் செத்து விட்டது.எழுந்து சென்று விட்டார்.
எனக்கோ இவனுடன் சேர்ந்து ஏன் தான் வந்தோம் என்று ஆகிவிட்டது.வேலை கூட இல்லாத சூழலில் சமூகத்தில் நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் எப்படி இவ்வாறு பேசமுடிகிறது என்று நான் அதிர்ச்சியாகி விட்டேன்.
அடுத்து ஒரு சம்பவம்.தனியார் பள்ளி ஒன்றில் தன்னை வேலைக்கு சேர்த்துக் கொள்ளச்சொல்லி பணம் கொடுத்து ஏமாந்த கதை.கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாயை பள்ளி முதலாளியிடம் கொடுத்து விட்டு பள்ளியில் இலவச சேவை செய்து வந்தான்.ஒரு கட்டத்தில் தனக்கு வேலை கிடைக்காது என்பதை உணர்ந்து தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க ஆரம்பித்தான்.அவனைப் போல் நூறு பேருக்கு இல்லை என்று பதில் சொல்வதையே தன் வேலையாய் வைத்திருக்கிறார் பள்ளி முதலாளி.நண்பனும் நடையாய் நடந்து களைத்துப் போய்விட்டான்.அப்போதும் தன் மதிப்பை விட்டுக்கொடுக்காமல் சொன்ன வாசகம் இதுதான்."இந்தப் பையன் கொடுத்த பணத்தை வாங்காமல் விடமாட்டான் போல இருக்கே" என்று அந்தப் பள்ளி முதலாளியை நினைக்க வைத்து விட்டேன் என்று சொன்னான்.கேட்டுக் கொண்டிருந்த எங்களுக்கோ திகைப்பு,காசு கொடுத்து ஏமாந்ததும் இல்லாமல் எப்படி இவ்வளவு கெத்தாக பேசமுடிகிறது இவனால் என்று. இன்று வரை காசு வாங்க முடியவில்லை.
இப்படி இருக்கும் பொழுது நண்பனுக்கு திருமணம் செய்து வைத்தனர்."முப்பது பவுன் நகை போடுறாங்களாம்,பிச்சைக்காரப்பசங்க" மாமனார் வீட்டைப் பற்றிய நண்பனின் கமெண்ட்.வேலை,வெட்டி இல்லாத உனக்கு பெண் கொடுப்பதே பெரிது என்று மற்ற நண்பர்கள் அவனுக்கு விளக்க வேண்டி இருந்தது.
இப்படியாக பல நேரங்களில் எங்களை மண்டை காய வைத்திருக்கிறான் நண்பன்.இதை சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்று நினைத்துக் கொண்டேன்.உண்மையிலேயே பெரும் பனமோ,புகழோ,தகுதியோ,திறமையோ உள்ளவர்களுக்கு வருவது தான் சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்.நண்பனிடம் குறிப்பிட்டுச் சொல்லும் படியான எந்த விசயமும் இல்லை.பின் ஏன் இப்படி அளவுக்கதிகமாக அலட்டிக்கொள்கிறான் என்று நினைப்பேன்.அப்போது தான் NPD (Narcissistic Personality Disorder) என்பதைப் பற்றி அறிய நேர்ந்தது.தன்னைப் பற்றி தகுதிக்கு மீறி,தன்னையே வியந்து போற்றிக்கொள்ளும் ஒரு இயல்பு இந்த NPD உள்ளவர்களுக்கு இருக்கிறது.
நண்பனின் அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர இப்போது தான் முடிந்தது.NPD போன்று MPD(Multiple personality disorder ) என்று ஒரு பாதிப்பு மனிதர்களிடம் இருக்கிறது.இப்படி ஆட்களில் யாரையும் இதுவரை சந்திக்கவில்லை.ஆனால் வலைப்பதிவர்களில் MPD பாதிப்பு பெருமளவில் இருப்பதை உணர முடிகிறது.
பின் தொடரும் சிலுக்கின் குரல்
ஒரு சோடி நல்ல கலராக , பார்க்க வடநாட்டு மக்களாக தெரிந்தார்கள்.ஆங்கிலத்திலேயே
பேசி நம்மைக் கொன்று எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அருங்காட்சியகம் ஒன்றைப் பார்ப்பதற்காக வண்டி நின்றது .அனைவரும் உள்ளே சென்று பார்த்துக்கொண்டிருந்தோம்.கைகளை பாண்ட் பாக்கெட்டினுள் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய முழங்கையின் மேல் திடீரென ஒரு ரோஜாப்பூவை வைத்து அடித்தது போல் ஒரு சின்ன இடி.திரும்பிப் பார்த்தால் வண்டியில் அருகில் அமர்ந்துவந்த அழகுப்பெண்.நான் பார்க்கவும் அவர் அப்ப்ப்பா என்று வலியிலும்,வெட்கத்திலும் மெல்லிய குரலில் கத்தும் ஓசை காதில் விழவும் சரியாக இருந்தது.அவருடைய மார்பு தான் இடித்து விட்டது.என் வாழ்வில் அப்படியொரு இனிமையான,கிளுகிளுப்பான குரலை நான் கேட்டதில்லை.
ஆயிரம் சிலுக்குகள் ஒன்றாய்ச் சேர்ந்து காதில் கிசுகிசுப்பது போன்று இருந்தது அது.
சில நிமிடங்களில் எனக்கு சுய உணர்வு திரும்பியது.ஆஹா நம்ம ஊரு பொண்ணு தானா இது என்று நினைத்துக் கொண்டேன்.ஆபத்துக் காலங்களில் நம்மையும் அறியாமல் பேசுவது நம் தாய்மொழி தான்.
இந்தசம்பவம் என் நினைவடுக்குகளின் ஆழத்தில் இருந்தது.சமீபத்தில் தமிழ்நதியின் ஒரு பின்னூட்டம் பார்த்தேன்.தூங்கும் போது ஒருவனுடைய பின்புறத்தில் அடித்தால் எந்த மொழியில் கத்துவான் என்று கேட்டிருந்தார்.ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொண்டிருப்பவர்களை நன்றாகக் கேலி செய்திருந்தது அப்பின்னூட்டம்.அதைப் படித்தவுடன் மனதின் ஆழத்திலிருந்து விடுபட்டு மிதந்து மேலே வந்து விட்டது.
(தலைப்பு உபயம்-ஜெயமோகன்.அவருக்கு நன்றி.)
Friday, January 11, 2008
கலாமின் புத்தாண்டுச் செய்தி
ஒன்று,
'வெள்ளத்தனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு'
மற்றொன்று
'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து'
இரண்டுமே மனம் சம்பந்தப் பட்டது.உயர்ந்த எண்ணங்களை மனதில் விதைத்தால் உயர்ந்த பலன்களைஅறுவடை செய்யலாம்.விதைத்து விட்டால்
தானாகவே பலன் கிடைத்து விடுமா?அதற்கும் வழி சொல்கிறார் கலாம்.
எண்ணங்களில் உறுதி,கடும் உழைப்பு,செயலில் தீவிரம் இம்மூன்றும் இருந்து விட்டால் எத்தகைய சாதனையையும் செய்யலாம்.என்னைப் போன்ற வசதி,வாய்ப்புகளற்ற ஆனால் கனவு மட்டுமே காணத் தெரிந்தவர்களுக்கு கலாம் ஒரு ஆற்றல்மூலமாகத் திகழ்கிறார்.
என்னுடைய கனவை சுருக்கமாகச் சொன்னால் மாபெரும் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்த வேண்டும்,அதில் பயில்பவர்களுக்கு ஆடம்ஸ்மித்,மார்க்ஸ்,நியூட்டன்,டார்வின்,ஐன்ஸ்டீன் போன்ற உலகை மாற்றிய சிந்தனையாளர்களை பயிற்றுவிக்க வேண்டும்.காலம் கருணை காட்டினால் ,அதாவது என்னை உயிரோடு விட்டு வைத்தால் இதையெல்லாம் செய்தே தீர வேண்டும்.
