Friday, August 15, 2008

காந்தி திரைப்படம்




சுதந்திரதினத்தை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற காந்தி திரைப்படம் தூர்தர்ஷனில் தமிழில் ஒளிபரப்பப்பட்டது. ஆங்கிலத்தில் சிலமுறை பார்த்திருந்தாலும் தமிழில் பார்த்தது மிகவும் நன்றாக இருந்தது. நம் முன்னோர்களின் தியாகத்தையும்,சுதந்திரப்போராட்ட வரலாறையும் இதைவிட எளிமையாகவும்,அழகாகவும்,முக்கியமாக உண்மையாகவும் சொல்லிவிட முடியாது. காந்தி என்னும் மாமனிதனின் நாட்டைச்சேர்ந்தவன் என்று நாமெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

இறுதிக்காட்சிகளில் மிகமுக்கியமான ஒரு காட்சியை தூர்தர்ஷனில் இருட்டடிப்பு அல்லது கத்தரித்து விட்டார்கள். சுதந்திரம் வழங்க வெள்ளை அரசு முடிவு செய்தவுடன் காந்தி,ஜின்னா,படேல்,நேரு ஆகியோர் தனியறையில் ஆலோசனை செய்கின்றனர். தனிநாடு வேண்டுமென்று ஜின்னா உறுதியாக இருக்கிறார். காந்தி அவரை சமாதானம் செய்யும் விதமாக 'இந்தியாவின் முதல் பிரதமராக நீங்கள் இருங்கள்' என்கிறார், நீண்ட அமைதி நிலவுகிறது, நேருவின் குரல் அமைதியை உடைக்கிறது. "பாபு நீங்கள் சொன்னால் ஏற்றுக்கொள்கிறேன்,ஆனால் வெளியே நிற்கும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ளும் நிலை இல்லை" என்கிறார். அடுத்ததாக ஜின்னா "சுதந்திர இந்தியா, சுதந்திர பாகிஸ்தானா அல்லது உள்நாட்டு யுத்தமா" என்று கேட்கிறார். ஜின்னாவின் முத்தாய்ப்பான இந்த வசனத்திற்குப்பிறகு அடுத்த காட்சியில் இருநாடுகளாக பிரிந்து தனித்தனி தேசியக்கொடி ஏற்றிக்கொண்டிருப்பார்கள். இந்த இரு காட்சிகளுக்கும் இடையிலே உள்ள காட்சி வெட்டப்பட்டுள்ளது. அதில் காந்தி இறுதி முயற்சியாக மற்ற மூவரையும் அறைக்கு வெளியே அழைத்து வந்து பேசுவார். படேல் தனிநாடு பிரிவினையை மூர்க்கமாக எதிர்ப்பார், உடனே ஜின்னா "நாங்கள் வெள்ளையனிடம் சுதந்திரம் பெற்று, மீண்டும் உங்களிடம் அடிமையாக இருக்க மாட்டோம்" என்று கூறுவார். உங்களிடம் என்று சொல்லும் இடத்தில் இந்துக்களிடம் அல்லது பிராமணர்களிடம் என்று குறிப்பாக சொல்லுவாரா அல்லது உங்களிடம் என்று பொதுவாக சொல்லுவாரா என்பது சரியாக நினைவில் இல்லை. படத்தின் பஞ்ச் வசனம் இதுதான். ஏன் இது தூர்தர்ஷனால் நீக்கப்பட்டது?. சினிமாவில் இடம்பெற்ற இந்த உரையாடல் இயக்குனரின் கற்பனையா? அல்லது உண்மையாகவே நடந்தது தானா? தெரிந்தவர்கள் தெரியப்படுத்துங்களேன்.

6 comments:

')) said...

நல்ல பதிவு,வாழ்த்துகிறேன்.

')) said...

மிக்க நன்றி வேளராசி.

')) said...

காந்தி பட ஆங்கில சிடியை மீண்டும் இன்று பார்த்தேன்.இந்த பதிவில் இரண்டு தகவல் திருத்தம்.
ஒன்று:பதிவில் குறிப்பிட்டது போல் வெட்டப்பட்ட காட்சி, ஜின்னா பேசும் 'உள்நாட்டு யுத்தமா' என்ற வசனத்திற்கு அடுத்த காட்சி அல்ல.இந்தக்காட்சி மூன்று நிமிடங்களுக்கு முன்னாலேயே இடம்பெறுகிறது.

//உங்களிடம் என்று சொல்லும் இடத்தில் இந்துக்களிடம் அல்லது பிராமணர்களிடம் என்று குறிப்பாக சொல்லுவாரா அல்லது உங்களிடம் என்று பொதுவாக சொல்லுவாரா என்பது சரியாக நினைவில் இல்லை.//

இரண்டு:இந்துக்களிடம் என்று சொல்கிறார்.

Anonymous said...

They are afraid for the truth.

')) said...

மிக நல்ல பதிவு....

காலத்தின் ஓட்டத்தில் தவறுகளை பதிவு செய்ய வேண்டும்.

ஏன் அப்படி நீக்கியது?

')) said...

குரங்காரே வருகைக்கு நன்றி.

இன்று சன்டிவியில் காந்தி திரைப்படம் தமிழில் ஒளிபரப்பப்பட்டது.பதிவில் நான் குறிப்பிட்ட காட்சி வெட்டப்படவில்லை.

டிடி யில் ஒளிபரப்பப்பட்டபோது நான் தொடர்ச்சியாக பார்க்கவில்லை.எனவே அதிலும் வெட்டப்படாமல் ஒளிபரப்பப்பட்டிருக்கலாம் என்று எண்ணத்தலைப்படுகிறேன்.