2008ஆம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடம் வென்ற மாணவர் ராஜேஷ்குமார் அவர்களின் பேட்டி கலைஞர் தொலைக்காட்சியில் ரமேஷ்பிரபா அவர்களால் காணப்பட்டது.சாதனை மாணவரின் அனுபவங்களை பதிந்து வைக்க வேண்டும் என்ற எண்ணமே இந்தப்பதிவு.
மாணவர்கள் அதிகாலையில் எழுந்து படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
படித்ததை எழுதிப்பார்த்துக் கொள்வது மிக முக்கியம்.இந்தப் பயிற்சி தேர்வறையில் பதற்றம் கொள்ளச்செய்யாது.
ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்க தயக்கம் கொள்ளக்கூடாது.
கிராமப்புற மாணவர்களுக்கு மற்றும் பல மாணவர்களுக்கு ஆங்கிலம் சிம்ம சொப்பனமாக இருக்கும்.அவர்கள் ஆசிரியர்களிடம் தங்கள் பிரச்சினையை விளக்கி , அதை எப்படி மேற்கொள்வது என்பதை கேட்க வேண்டும்.பலப்பல ஆண்டுகளாக கற்பிப்பதிலேயே ஊறியிருக்கும் ஆசிரியர்கள் தங்கள் அனுவத்திலிருந்து நமக்கு நல்ல வழியைக்காட்டுவார்கள்.இரண்டாவதாக ஆங்கிலம் பேச தயக்கமோ,வெட்கமோ கொள்ளக்கூடாது.தவறுகளை கண்டறிந்து அடுத்த முறை திருத்திக்கொள்ள வேண்டும்.
பச்சைக்காய்கறிகள்,பழங்கள்,பழச்சாறு,நிறைய தண்ணீர் அருந்துவது போன்றவை , உடல் தளர்வடைவதை பெரிதும் குறைக்கிறது.
தேர்வு சமயங்களில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.
தியானம் செய்தல் மனதின் சக்தியைப் பெருக்கி ஞாபகத்திறனை அதிகரிக்கிறது.
தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே முடித்துவிட வேண்டும்.நமக்கே தெரியாமல் நாம் செய்திருக்கும் தவறுகளை கண்டுபிடித்து சரிசெய்ய வேண்டும்.
மதிப்பெண்கள் குறைவாயிருந்தால் , கடிந்து கொள்ளாமல் அவர்களை ஊக்கப்படுத்த பெற்றோர்கள் முன்வரவேண்டும்.இந்த அணுகுமுறை மாணவரின் மனவளர்ச்சிக்கு இன்றியமையாதது.
மேலும் பல பயனுள்ள தகவல்களை ராஜேஷ்குமார் வழங்கினார்.அவருக்கு வாழ்த்துகளும்,நன்றிகளும்.
பின்குறிப்பு:
என்னுடைய அனுபங்களை அவருடன் ஒப்பிட்டுப்பார்த்தேன்.
அதிகாலை எழும் பழக்கம் எப்போதுமே இருந்ததில்லை.
பாடங்களை எழுதிப்பார்க்கும் வழக்கமில்லாததால் , பத்தாம் வகுப்பு வரலாறு தேர்வில் வெறும் நாற்பது மதிப்பெண்கள் பெற்று மயிரிழையில் உயிர் தப்பினேன்.
தேர்வை விரைவாக முடித்துவிட்டு அதை சரிபார்க்க வேண்டும் என்ற அறிவு இல்லாததால் கணிதத்தில் தொண்ணூற்றியெட்டு மதிப்பெண்கள் எடுத்து இரண்டு மதிப்பெண்களை கோட்டை விட்டேன்.
கல்லூரியில் உனக்கு என்ன பிரச்சினை என்று கேட்ட ஆசிரியரிடம் ஆங்கிலம் தான் பிரச்சினை என்று கூறியவுடன் உற்றுப்பார்த்து விட்டு என்னை விட்டுவிட்டார்.நமக்கு உதவ இவருக்கு விருப்பமில்லையென இத்தனை நாள் வரையிலும் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட்டிருக்கிறேன் என்பதை இன்று தான் உணர்ந்தேன்.இவனுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் தன்னைதேடி வருவான் என்று அந்த ஆசிரியர் இருந்திருக்கக்கூடும்.
Tuesday, March 10, 2009
Subscribe to:
Comments (Atom)
